கீழ்வேளூர் அருகே வாய்க்கால்கள் தூர்வாரும் பணி அதிகாரி ஆய்வு


கீழ்வேளூர் அருகே வாய்க்கால்கள் தூர்வாரும் பணி அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 21 Aug 2019 10:45 PM GMT (Updated: 21 Aug 2019 6:48 PM GMT)

கீழ்வேளூர் பகுதியில் நடைபெற்று வரும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கீழ்வேளூர் அருகே குருக்கத்தி, காக்கழனி, பாலக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, குருக்கத்தி கிராமத்தில் ரூ.55 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும், ஓடம்போக்கியாறு “அ” பிரிவு வாய்க்கால் மற்றும் அதன் பிரிவு வாய்க்கால்கள் சிறப்பு தூர்வாரும் பணிகளையும், காக்கழனி கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் காக்கழனி எண்.2 வாய்க்காலின் தலைப்பு கரையை பலப்படுத்துதல் மற்றும் மதகு கட்டுமானத்தை பாதுகாக்கும் வகையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து கீழ்வேளூர் தாலுகா பாலக்குறிச்சி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் குதிரைசேவகனாறு கடைமடை இயக்கு அணை மறுகட்டுமானம் செய்தல் பணிகளையும், பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இந்த கிராமங்களில் உள்ள பாசன சங்கங்களை சேர்ந்த விவசாயிகளை சந்தித்து, இந்த பணிகளை விரைந்து முடிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

ஆய்வின் போது கஜா மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப்குமார் (குடிமராமத்து பணிகள்), நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைச்செல்வம், உதவி செயற்பொறியாளர் பாண்டியன் (பொறுப்பு), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story