தாம்பரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சுரங்கப்பாதை


தாம்பரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சுரங்கப்பாதை
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. கிழக்கு, மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டபோது, ரெயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்துசெல்ல எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.

கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாலம் வழியாக கணபதிபுரம் உள்ளிட்ட கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பொதுமக்கள் நடந்து சென்றுவந்தனர். பள்ளி மாணவ-மாணவிகள் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பங்களும் நடைபெற்றுவந்தன.

உயிரிழப்புகளை தவிர்க்க ரெயில் தண்டவாளத்தை கடந்துசெல்ல வசதியாக சுரங்க நடைபாதை அமைக்கவேண்டும் என கிழக்கு தாம்பரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ரெயில்வே நிர்வாகம் ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் ரெயில்வே மேம்பாலம் அருகேயே கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்புதான் இந்த சுரங்கப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. திறந்து 2 நாட்களில் இந்த சுரங்கப்பாதையில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் உடைக்கப்பட்டன. மின் வயர்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டது. இதனால் பகல் நேரத்திலும் சுரங்க நடைபாதை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

தற்போது இந்த சுரங்கப்பாதையானது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. பகல் நேரங்களிலும் கூட சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சுரங்கப்பாதை படிக்கட்டுகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தற்போது பெய்துவரும் மழையால் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

சுரங்கப்பாதையின் கிழக்கு பகுதி சேலையூர் போலீஸ் கட்டுப்பாட்டிலும், மேற்கு பகுதி தாம்பரம் போலீஸ் கட்டுப்பாட்டிலும் உள்ளது. ஆனால் எந்த போலீசாரும் இந்த சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திறந்து சில மாதங்களிலேயே சமூக விரோதிகளால் சீரழிக்கப்படும் இந்த சுரங்கப்பாதையை ரெயில்வே நிர்வாகம் மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும். அல்லது பராமரிப்பு பணிகளை தாம்பரம் நகராட்சியிடமாவது ஒப்படைக்கவேண்டும்.

சமூக விரோத செயல்களை தடுக்க போலீசார் சுரங்கப்பாதையை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story