கும்பகோணம் பகுதியில் எலிக்கறி விற்பனை அமோகம் ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்


கும்பகோணம் பகுதியில் எலிக்கறி விற்பனை அமோகம் ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:00 AM IST (Updated: 22 Aug 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் எலிக்கறி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி முடிந்து போதிய மழை இல்லாத காரணத்தினால் அடுத்தகட்ட சம்பா சாகுபடி தொடங்கப்படாமல் வயல்வெளிகளை அப்படியே விட்டு உள்ளனர். இதனால் விவசாயம் செய்யப்படாமல் உள்ள வயல்களில் எலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன.

இதனையடுத்து எலிகளை பிடித்து சிலர் விற்பனை செய்ய தொடங்கினர். பிடிக்கப்பட்ட எலிகள் அனைத்தையும் சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை அந்த பகுதியை சுற்றி உள்ள ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

ஒரு கட்டு ரூ.200

இந்த நிலையில் அடுத்ததாக சம்பா சாகுபடி தொடங்கிய பின்பும் வயல்வெளிகளில் தொல்லை செய்யும் எலிகளை எலிப்பொறி வைத்து வேட்டையாட தயாராகி வருகின்றனர். தற்போது கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூர், ஆவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எலிக்கறி விற்பனை அமேகமாக நடைபெற்று வருகிறது.

இதில் ஒருவித மருத்துவகுணம் இருப்பதாக கூறி பொதுமக்கள் வாங்கி செல்வதாக விற்பனையாளர் தெரிவித்தார். இதில் கம்பிகளில் 6 எலிகளாக கட்டப்பட்டு ஒரு கட்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வயல் எலிக்கறி கிடைப்பது அரிது என்பதால் பலர் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர்.

Next Story