புதுப்பொலிவு பெறும் ஊட்டி ரெயில் நிலையம், சுவர்களில் ஓவியம் வரையும் பணி தீவிரம்
ஊட்டி ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. அதன் சுவர்களில் ஓவியம் வரையும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
ஊட்டி,
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்வதை அதிகளவில் விரும்புகின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனையொட்டி ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் பலருக்கு ரெயிலில் பயணிக்க டிக்கெட் கிடைக்கவில்லை. இதையடுத்து மேட்டுப்பாளையம்-ஊட்டி, ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், ஊட்டி ரெயில் நிலையத்தின் வருமானம் 3 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
கடந்த 2017-18-ம் ஆண்டில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 289 பயணிகள் ஊட்டிக்கு ரெயில் வழியாக வந்து சென்றார்கள். இதன் மூலம் ரூ.86 லட்சத்து 2 ஆயிரத்து 246 வருமானமாக கிடைத்தது. 2018-19-ம் ஆண்டில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் வந்து சென்றனர். இதன் மூலம் ரூ.2 கோடியே 40 லட்சத்து 717 வருமானமாக கிடைத்தது. ஆண்டுக்கு ஆண்டு வருகை அதிகரித்துக்கொண்டே செல்வதால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி ரெயில் நிலையம் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. குன்னூர், ரன்னிமேடு ரெயில் நிலையங்களில் நீலகிரி மாவட்டத்தை பிரதி பலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. அதேபோல் சுற்றுலா பயணிகள் மனதில் நீங்கா இடம் பெற ஊட்டி ரெயில் நிலைய சுவரில் ஓவியம் வரைந்து அழகாக மாற்றப்படுகிறது. முன்பக்க சுவரில் வர்ணம் பூசப்பட்டு, மேட்டுப்பாளையம்-ஊட்டி வரை உள்ள ரெயில் நிலையங்கள், ஊட்டி மலை ரெயில், நீலகிரி வனப்பகுதிகள், தேயிலை தோட்டம், வனவிலங்குகள், தோடர், குரும்பர், இருளர், கோத்தர் போன்ற பழங்குடியின மக்களின் படங்கள் ஓவியங்களாக வரையப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஓவியங்களை தத்ரூபாக வரையும் பணி மும்முரமாக நடக்கிறது. இதனால் ஊட்டி ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
Related Tags :
Next Story