கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊராட்சிகள் தோறும் 4 மணிநேரம் செய்யும் பணிக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாகவும், அதிக ஊனத்திற்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும், அரசு பஸ்களில் பயணம் செய்ய பயணச்சலுகை சான்று வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டம் முறையாக நடத்தி தீர்வுகாண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட துணை செயலாளர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கார்த்திக், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அஞ்சலை, சின்னப்பொண்ணு, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் சாந்தி, கொளஞ்சி, ராணி உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள், சப்-கலெக்டர் ஸ்ரீகாந்தை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனு பெற்ற அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story