அரசு பஸ் கண்டக்டர் கழுத்தை நெரித்துக்கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது


அரசு பஸ் கண்டக்டர் கழுத்தை நெரித்துக்கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2019 11:45 PM GMT (Updated: 21 Aug 2019 7:31 PM GMT)

அரசு பஸ் கண்டக்டர் கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பணத்துக்காக அவரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னிமலை,

சென்னிமலை அருகே உள்ள காளிக்காவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து பழனிச்சாமி வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னிமலை அருகே உள்ள 1010 நெசவாளர் காலனி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பழனிச்சாமி வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி பழனிச்சாமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை தொடர்பாக சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் பழனிச்சாமியுடன் பழகி வந்த சென்னிமலை அருணகிரிநாதர் பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஆறுச்சாமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஆறுச்சாமி, தான் 4 பேருடன் சேர்ந்து பழனிச்சாமியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசில் கூறினார். மேலும் அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

சென்னிமலை அருணகிரிநாதர் பகுதியை சேர்ந்த நான் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறேன். இந்தநிலையில் எனக்கும், 1010 நெசவாளர் காலனியை சேர்ந்த பழனிச்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் என்னுடைய அனுமதியுடன் ஆட்டோவை எடுத்து பயன்படுத்தி வந்தார். இதன்காரணமாக அவரின் வீட்டுக்கு நான் அடிக்கடி சென்று வந்தேன். சமீபத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஓய்வு பெற்றதற்கான பணம் பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டது எனக்கு தெரியவந்தது.

இதனால் அந்தப் பணத்தை அவரிடம் இருந்து எடுக்க முடிவு செய்தேன். அதன்படி எனக்கு தெரிந்தவர்களான அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி (22), சென்னிமலையை சேர்ந்த பூபதி (28) ஆகியோரிடம் கூறினேன். அவர்கள் 2 பேரும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (24), திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோரிடம் இதுபற்றி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாங்கள் 5 பேரும் பணத்தை எடுப்பதற்காக பழனிச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டோம்.

அதன்படி நான் மற்றும் மகேந்திரன், பாலாஜி, பூபதி, முத்துக்குமார் ஆகியோருடன் 1010 நெசவாளர் காலனியில் உள்ள பழனிச்சாமியின் வீட்டுக்கு கடந்த 12-ந்தேதி இரவு 11.30 மணி அளவில் சென்றோம். அப்போது அவர் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். இதனால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரின் கை மற்றும் கண்களை துணியால் கட்டினோம். இதனால் திடுக்கிட்டு எழுந்த பழனிச்சாமி சத்தம் போட்டு அலறத்தொடங்கினார். இதன்காரணமாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கயிற்றால் அவரை கழுத்தை நெரித்தோம். இதனால் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்ததோடு இறந்துவிட்டார். பின்னர் அவர் தங்கியிருந்த அறையில் பீரோ உள்பட அனைத்து இடங்களிலும் பணம் உள்ளதா? என்று தேடினோம். ஆனால் பணம் எதுவும் எங்கள் கையில் சிக்கவில்லை. பின்னர் பழனிச்சாமி படுத்திருந்த இடத்தில் தேடினாம். அப்போது பழனிச்சாமி படுத்திருந்த தலையணையின் கீழ் ரூ.24 ஆயிரத்து 500 மட்டும் இருந்தது. அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டோம். பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் அங்கிருந்து சென்றுவிட்டோம். இந்தநிலையில் நான் மட்டும் வழக்கம் போல் பழனிச்சாமியின் வீட்டுக்கு சென்றேன். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசாரிடம் தெரிவித்தேன். பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரை கொலை செய்ததாக ஆட்டோ டிரைவர் ஆறுச்சாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பாலாஜி, மகேந்திரன், பூபதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் முத்துக்குமார் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story