ஆத்தூரில், லோடு ஆட்டோவில் கடத்திய ரூ.29 லட்சம் கஞ்சா பறிமுதல் - டிரைவர் கைது


ஆத்தூரில், லோடு ஆட்டோவில் கடத்திய ரூ.29 லட்சம் கஞ்சா பறிமுதல் - டிரைவர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2019 10:45 PM GMT (Updated: 21 Aug 2019 8:19 PM GMT)

ஆத்தூரில் லோடு ஆட்டோவில் கடத்திய ரூ.29 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆத்தூர் மெயின் பஜாரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பிளாஸ்டிக் கூடைகளை ஏற்றிய லோடு ஆட்டோ வந்தது. அந்த லோடு ஆட்டோ ஆத்தூர்-புன்னக்காயல் ரோடு வழியாக சென்றது.

அந்த லோடு ஆட்டோவில் சில பிளாஸ்டிக் கூடைகளில் காலி மதுபான பாட்டில்கள் அடுக்கி வைத்து இருந்ததால், அவைகள் குலுங்கியதில் அதிக சத்தம் வந்தது. உடனே லோடு ஆட்டோவின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் தங்களது காரில் லோடு ஆட்டோவை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று, அங்குள்ள தனியார் மணல் ஆலை அருகில் வழிமறித்தனர்.

பின்னர் டிரைவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் மது குடித்து விட்டு, லோடு ஆட்டோவை ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. மேலும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து லோடு ஆட்டோவுடன் டிரைவரை ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆத்தூர் யாதவர் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடாசலம் (40) என்பது தெரிய வந்தது.

பின்னர் லோடு ஆட்டோவில் இருந்த பிளாஸ்டிக் கூடைகளை போலீசார் கீழே இறக்கி வைத்து சோதனை செய்தனர். அப்போது லோடு ஆட்டோவில் பிளாஸ்டிக் கூடைகளின் அடியில் 9 மூட்டைகளில் மொத்தம் 294 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.29 லட்சம் ஆகும். இதையடுத்து லோடு ஆட்டோ மற்றும் கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, வெங்கடாசலத்தை கைது செய்தனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில், வெங்கடாசலம் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி, வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரிடம், ஆத்தூர் அருகே புன்னக்காயலைச் சேர்ந்த கில்டன் என்பவர் தனது லோடு ஆட்டோ ஆத்தூரை அடுத்த முக்காணி பெட்ரோல் பங்க் அருகில் நிற்பதாகவும், அதனை ஓட்டிக் கொண்டு புன்னக்காயலுக்கு வருமாறும் கூறி உள்ளார். இதையடுத்து அந்த லோடு ஆட்டோவை வெங்கடாசலம் ஓட்டி வந்தபோது போலீசாரிடம் சிக்கியது தெரிய வந்தது.

மேலும் போலீசாருக்கு சந்தேகம் வராதவாறு, அதிகாலையில் மீன்கள் வாங்க செல்வது போன்று லோடு ஆட்டோவில் பிளாஸ்டிக் கூடைகளை அடுக்கி வைத்து சென்றுள்ளனர். மேலும் சில பிளாஸ்டிக் கூடைகளில் காலி மதுபாட்டில்களையும் கொண்டு சென்றுள்ளனர்.

கைதான வெங்கடாசலத்தை போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான கில்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தனர்? அதனை யாருக்கு அனுப்புகின்றனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூரில் லோடு ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட 294 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story