சாலை விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க ‘இ-சலான்’ கருவிகள் இன்ஸ்பெக்டர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
சாலை விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்காக இ-சலான் கருவிகளை இன்ஸ்பெக்டர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி வழங்கினார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் சாலை வீதி மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க ‘இ-சலான்’ என்ற கருவி போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் சாலை விதி மீறலில் ஈடுபடுபவர்களிடம் ‘இ-சலான்’ கருவி மூலம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு ‘இ-சலான்’ கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி தலைமை தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் அந்த கருவிகளை வழங்கினார். முதல் கட்டமாக அதிக வாகன தணிக்கை செய்யும் குறிப்பிட்ட 20 பகுதியை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி கூறியதாவது:-
ரசீது கொடுக்கும் முறையில் தற்போது பணத்தை நேரடியாக பெறாமல் சம்பந்தப்பட்டவரின் வங்கிக்கணக்கிலிருந்து அபராதம் வசூலிக்கும் முறைக்காக இந்த கருவி கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் அபராத தொகை ஏ.டி.எம். கார்டு மூலம் வசூல் செய்யப்படும். இது மிகவும் வெளிப்படை தன்மையாக இருக்கும். லஞ்சம் பெறுவது போன்ற செயல்களுக்கே இடமிருக்காது. ஏ.டி.எம். கார்டு இல்லாதவர்களிடம் அபராத தொகைக்கான சலான் வழங்கப்படும். இதில் உள்ள ரசீது எண்ணை வைத்து அபராத தொகையை தற்போது ஸ்டேட் வங்கியில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் சாலை விதி மீறுபவர்களின் விவரங்கள் குறித்தும், அபராத தொகை குறித்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அபராத தொகை கட்டாமல் இருக்கும் நபர் 2-வது முறை நாட்டில் எந்த பகுதிக்கு சென்று சாலை விதி மீறல் தொடர்பாக மீண்டும் சிக்கினால் அவரது விபரங்களை உடனடியாக இந்த கருவி காட்டும். அந்த சமயத்தில் பழைய அபராத தொகையையும் சேர்த்து போலீசார் கண்டிப்பாக வசூலிப்பார்கள்.
மேலும் இந்த கருவியில் கேமரா வசதியுடன் செல்போன் இணைப்பும் உள்ளது. அபராத தொகை வசூலிக்கும்போது சிலர் தகராறு செய்யக் கூடும். அவர்களை இந்த கருவியில் உள்ள கேமரா மூலம் படம் எடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக உள்ளது. மேலும் சாலை விதி மீறுபவர்கள் மற்றும் வாகனங்களின் புகைப்படங்களை எடுத்து அவற்றை வழக்கு விவரங்களுடன் இணைக்கவும் இந்த கேமரா பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து இ-சலான் கருவிகளும் விரைவில் பெறப்பட்டு அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசேகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story