ஏலகிரிமலையில் சாலைகளில் மீண்டும் உருண்டு விழுந்த பாறைகள்


ஏலகிரிமலையில் சாலைகளில் மீண்டும் உருண்டு விழுந்த பாறைகள்
x
தினத்தந்தி 21 Aug 2019 10:30 PM GMT (Updated: 21 Aug 2019 8:21 PM GMT)

ஏலகிரிமலையில் மீண்டும் சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன.

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக மலைகளில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவில் ஒரு பெரிய பாறை உருண்டு விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பாறை, கற்களை அகற்றினர். இந்த நிலையில் நேற்று 9, 14-வது கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டு, சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தது. அப்போது அந்த வழியாக பொதுமக்கள் யாரும் வராததால், விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட அலுவலர் திருலோகசுந்தரம் தலைமையில், பணியாளர்கள் பாறை கற்களை அகற்றினர்.

இதுகுறித்து அதிகாரி திருலோகசுந்தரம் கூறுகையில், ‘எனது தலைமையில் 3 சாலை ஆய்வாளர்கள் மற்றும் 30 சாலை பணியாளர்கள் சுழற்சி முறையில் சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கனமழை காரணமாக மலைப்பகுதி ஈரப்பதத்துடன் உள்ளது. இதனால் சரிவான பகுதிகளில் இருந்து பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை ஓட்டி செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

Next Story