நெல்லை அருகே, ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்; டிரைவர் கைது
நெல்லை அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லையில் இருந்து தாழையூத்து வழியாக மானூர் மதவக்குறிச்சிக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பயணம் செய்தனர். அதே பஸ்சில் சென்ற மற்றொரு பஸ் டிரைவர் அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவி அவரை கண்டித்தார். அப்போது அந்த பஸ் டிரைவர், மாணவியை அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதற்கிடையே தாழையூத்து பஸ் நிறுத்தம் வந்ததும், அந்த மாணவி பஸ்சை விட்டு இறங்கி தனது வீட்டுக்கு சென்று நடந்த விவரங்களை பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாழையூத்து பகுதியில் திரண்டனர். அந்த பஸ் மதவக்குறிச்சி சென்று விட்டு மீண்டும் அதே வழியாக நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.
பஸ் தாழையூத்து வந்ததும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பஸ்சை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். மேலும் அந்த பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்றனர். மாணவியின் உறவினர்களும் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். சம்பந்தப்பட்ட டிரைவரை கைது செய்யும் வரை ஊர் திரும்ப மாட்டோம் என்று கூறினர். உடனே போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நெல்லை மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த டிரைவர் கணேசனை நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story