ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், தும்பிவாடி, பவுத்திரம், விஸ்வநாதபுரி ஊராட்சிகள் மற்றும் கரூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ராஜவாய்க்கால் உள்ளது. இந்தவாய்க்காலுக்கு அணைப் பாளையம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் காலை கரூரை வந்தடைந்தது. இந்த நிலையில் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெரியதாதம்பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கரூர்-தாராபுரம் நெடுஞ்சாலையில் நேற்று காலை 10 மணி அளவில் மறியல் செய்தனர்.

தண்ணீர் திறப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அமராவதி அணை பொறியாளர் ராஜகோபால், க.பரமத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அமராவதி அணை பொறியாளர் ராஜகோபால், க.பரமத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் மற்றும் அதிகாரிகள் அணைப்பாளையம் அணைக்கு உடனடியாக சென்றனர். பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ராஜவாய்க்காலுக்கு தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story