உளுந்தூர்பேட்டை பகுதியில், குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு
உளுந்தூர்பேட்டை பகுதியில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், ஏரிகள், குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உளுந்தூர்பேட்டை அருகே டி.களத்தூரில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பில் ஏரிக்கரைகளை பலப்படுத்துதல், மதகு புதுப்பித்தல், தடுப்புச்சுவர் அமைத்தல், பாசன வாய்க்கால் சீரமைத்தல், வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் உள்ளிட்ட குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து கூ.கள்ளக்குறிச்சி ஏரியில் ரூ.23 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், காட்டுஎடையார் ஏரியில் ரூ.25 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும் கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குடிமராமத்து பணிகளின் விவசாய வழிகாட்டுதலுக்கான கையேட்டினை கலெக்டர் சுப்பிரமணியன் விவசாயிகளுக்கு வழங்கினார்.
இதைதொடர்ந்து கள்ளக்குறிச்சி வட்டம் வரஞ்சரம் ஏரியில் ரூ.40 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மலைக்காலத்திற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள், அலுவலர்கள், விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பாசனதாரர்கள் அரசு அலுவலர்களுடன் இணைந்து இப்பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கலெக்டர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
அப்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன், தாசில்தார்கள் உளுந்தூர்பேட்டை வேல்முருகன், கள்ளக்குறிச்சி தயாளன், வெள்ளாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முருகவேல், கள்ளக்குறிச்சி உதவி பொறியாளர் பூங்கொடி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story