ஓசூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகளை பிடிக்கும் பணி தாமதம்
ஓசூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த சில மாதங்களாக 2 காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தாலும் மீண்டும் அந்த யானைகள் இப்பகுதிக்கு வந்து விடுகின்றன. 2 யானைகளில் ஆக்ரோஷமாக சுற்றும் குரோபர் என்ற யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக, முதுமலை டாப்சிலிப் பகுதியிலிருந்து மாரியப்பன், பரணி என்ற 2 கும்கி யானைகள் ஓசூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் 2 யானைகளையும் பேரண்டபள்ளி காட்டுக்கு வனத்துறையினர் விரட்டினார்கள். இதனிடையே யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்த தகுதியான இடத்தை தேர்வு செய்வதற்காக வனத்துறை மருத்துவர்கள் மற்றும் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவிலிருந்து மயக்க ஊசி செலுத்தும் நிபுணர்கள் ஓசூர் வந்தனர். பின்னர், பேரண்டபள்ளி அருகே கதிரேபள்ளி மற்றும் ஆலூர் ஆகிய 2 பகுதிகளை அவர்கள் தேர்வு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று 2 யானைகளுக்கும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை மருத்துவர்கள், மயக்க ஊசி செலுத்தும் நிபுணர்கள் மற்றும் வனத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் அப்பகுதியில் மழை பெய்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக, காட்டு யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
மழை நின்ற பிறகே இந்த பணியை மேற்கொள்ள முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story