நீர்வளத்தை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்-மத்தியக்குழு தலைவர்


நீர்வளத்தை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்-மத்தியக்குழு தலைவர்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

நீர்வளத்தை பாதுகாக்க மண்ணின் தன்மைக்கேற்ப மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மத்தியக்குழு தலைவர் இந்தர்தமீஜா அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டம் மற்றும் நீர்மேலாண்மை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சக இணைச்செயலாளர் இந்தர்தமீஜா தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார். இதில் மத்தியக்குழு அதிகாரிகள் ருக்மணி, சரங்கதர் நாயக், பரிடா, சஞ்சய் கோலி, மத்திய ஜல் சக்தி அமைச்சக நீர்வளம் நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்ச்சி துறை தொழில்நுட்ப அலுவலர்கள் ஆறுமுகம், சுக்லா, விஞ்ஞானிகள் ஜோசப், விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்தியக்குழு தலைவர் இந்தர் தமீஜா பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 361 ஏரிகள் மற்றும் குளங்களில் ரூ.24.83 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் சனத்குமார் நதியில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் நீர்வளத்தை பாதுகாக்க மண்ணின் தன்மைக்கேற்ப மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் மற்றும் நீர்மேலாண்மை திட்டங்களை தீவிரமாக செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு அலுவலர்கள் பொதுமக்கள், விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்று மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அனைத்து வீடுகளிலும் ஏற்படுத்துவது, தண்ணீர் மாசுபாட்டை தடுப்பது என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்மேலாண்மை திட்ட பணிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்ட பணிகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு மாணவ-மாணவிகளுக்கும் ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story