ராஜா வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள், கழிவுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ராஜா வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் மற்றும் கழிவுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பரமத்திவேலூர்,
பரமத்தி வேலூர் வட்டத்தில் காவிரி கரையோர பகுதி விவசாயிகள் ராஜா வாய்க்கால் பாசனத்தை நம்பியே உள்ளனர். இந்த வாய்க்காலை நம்பி வாழை, வெற்றிலை, கோரை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்துள்ளனர். பராமரிப்பிற்காக வருடத்தில் ஒருமுறை மட்டும் 15 நாட்கள் ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம்.
ஆனால் காவிரியில் போதிய தண்ணீர் இல்லாததாலும், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாலும் ராஜா வாய்க்காலில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
பின்னர் நடைபெற்ற மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமையிலான கலந்தாய்வு கூட்டத்திலும் விவசாயிகள் பராமரிப்பு பணிகளை தற்போது மேற்கொள்ளக் கூடாது எனவும், வாடும் பயிர்களை காக்க உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் நேற்று முன்தினம் காலை பரமத்தி வேலூரை வந்தடைந்தது. ஆனால் முழுமையாக தண்ணீர் வராமல் பாண்டமங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்தி வேலூர் பேரூராட்சிகளின் சாக்கடை கழிவுகள், ஆகாய தாமரை செடிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் தண்ணீரின் போக்கு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் இந்த கழிவுகள் மற்றும் ஆகாய தாமரை செடிகளை உடனடியாக அகற்றி கடைமடை வரை தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story