பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 8:36 PM GMT)

குளித்தலையில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை காந்திசிலை அருகே நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் பிரபாகர் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தை மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய பஸ் நிலையம்

குளித்தலையில் புதிய பஸ்நிலையம் உடனடியாக அமைக்கவேண்டும். குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும். ரெயில்வேகேட் உழவர் சந்தை இடையே உள்ள சாலையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். குளித்தலை பகுதியில் ரெயில்வே மேம்பாலம், மின்மயானம், தீயணைப்பு நிலையம் அமைக்கவேண்டும். நகராட்சி நிர்வாகம் குடிநீரை விற்காமல் கட்டண குடிநீர் விற்பனை நிலையத்தை, இலவச குடிநீர் வழங்கும் நிலையமாக மாற்றவேண்டும். இரவு நேரங்களில் புறவழிச்சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் குளித்தலை நகர பகுதிக்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். திருச்சி- கரூர் புறவழிச்சாலையில், குளித்தலை-முசிறி செல்லும் வகையில் இணைப்பு சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது. முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசி, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். 

Next Story