நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் பழுதடைந்த, மோசமான சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

வரிவருவாய்

நாகர்கோவில் மாநகரின் 52 வார்டுகளிலும் சாலைகள் சீர்செய்யப்படாத காரணத்தால் பொதுமக்கள் விபத்துகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழும் நிலை உள்ளது. அடிப்படை வசதி எதைக்கேட்டாலும் நிதி இல்லை என்று ஆணையர் கூறுகிறார். தற்போது வரி வருவாய் 50 சதவீதம் அதிகமாக கிடைத்துள்ளது. இதைவிட குறைவாக வரி வருவாய் இருந்த காலங்களில் பல ஆணையர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.

தற்போது உள்ளாட்சி அமைப்புகளும் இல்லை. இருந்தால் கூட கவுன்சிலர்கள் தங்களது வார்டு பணிகளை செய்யக்கோரி வலியுறுத்துவார்கள். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு, உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் 100 சதவீதம் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தோடு தேர்தலை நடத்தாமல் இருக்கிறது. அதனால் தான் ஆணையரிடம் கோரிக்கை வைக்கிறோம். பொதுமக்களிடம் இருந்து வசூலித்த வரி பணத்தை அரசு கணக்கில் ரூ.10 கோடியை அதிகாரிகள் டெபாசிட் செய்து வைத்துள்ளனர். மக்களிடம் வசூலித்த இந்த பணத்தில் இருந்து சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை ஏன் செய்ய முடியவில்லை?.

இவ்வாறு அவர் பேசினார்.

தூக்கி எறியப்பட வேண்டும்

முன்னதாக ஆஸ்டின் எம்.எல்.ஏ. பேசும்போது, “சாலைகளை சீரமைக்க எத்தனையோமுறை வலியுறுத்தியும் மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்காததால்தான் இதுபோன்ற போராட்டங்களை, தெருமுனை கூட்டங்களை நடத்தி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி அரசு, மக்கள் மீது அக்கறையில்லாத அரசாக இருக்கிறது. எனவே இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்” என்றார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரா.பெர்னார்டு, முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, வக்கீல் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தில்லைச் செல்வம், சி.என்.செல்வன், பசலியான், ராஜேஷ், சாகுல்ஹமீது, வக்கீல் மதியழகன், சேக்தாவூது, எம்.ஜே.ராஜன், அழகம்மாள் தாஸ், பாலஜனாதிபதி, சாய்ராம், குட்டிராஜன், சிவராஜன், நாஞ்சில் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story