மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியை தாண்டியது


மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியை தாண்டியது.

மேட்டூர்,

கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பின. இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைய தொடங்கியதால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதாலும், நடைபாதை, மெயின் அருவி பகுதிகள் வெள்ளப் பெருக்கால் சேதமடைந்ததாலும் பரிசல்களை இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்று 14-வது நாளாக நீடித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறையினர் அளவீடு செய்து கண் காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணை 110 அடியை தாண்டியதால் அதன் நீர்தேக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி வரை எதிரொலிக்கிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் காவிரி ஆற்றில் குளிக்கக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. அதுமட்டுமின்றி கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 116.39 அடியாக இருந்தது. நேற்று 116.43 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் வேகமாக உயரும்.

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மழை தீவிரம் அடைந்து அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படுமானால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 93.45 டி.எம்.சி. (120 அடி)யை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

ஆகவே இந்த ஆண்டு மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story