மானாவாரி பயிர்கள் விதைப்பு பணி: காப்பீடு செய்து கொள்ள வேளாண் அதிகாரி வேண்டுகோள்
மானாவாரி பயிர்கள் விதைப்பு பணி தொடங்கி விட்டதால் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்மை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேலாம்பட்டி, குன்னத்தூர், பி.அம்மாபட்டி, குமராபுரம், பாப்பையாபுரம், வையூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக விதைப்பு பணிக்கு ஏற்ற ஓரளவு மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம், பருத்தி, பாசி, உளுந்து, துவரை ஆகிய விதைகள் விதைப்பு பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் பேரையூர் பகுதியில் முழுமையான மானாவாரி விதைப்பு பணிகள் நடைபெறும். தற்போது பெய்த மழையால் 40 சதவீதம் மட்டுமே விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து டி.கல்லுப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மணிமாறன் கூறியதாவது:-
டி.கல்லுப்பட்டி வட்டார பகுதிகளில் ஆவணி மாதம் முதல் சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி பயிர் விதைப்பு பணிகள் நடை பெறும். தற்போது பெய்த மழையால் 2 கட்டங்களாக விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மானாவாரி பயிர்கள் விதைத்த விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்யலாம்.
காப்பீடு செய்யும் போது விதைப்பு செய்த அனைத்து பயிர்களுக்கான அடங்கல், பட்டா, சிட்டா, வங்கி கணக்கு எண், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
இதற்காக வேளாண் அலுவலர்களின் தக்க ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பிரீமியத்துடன் ஆவணங்களை வழங்கி வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story