பஸ்சில் இருந்து இறங்கிய கரூர் துணை தாசில்தார் சாக்கடை கால்வாயில் விழுந்து பலி - போலீசார் தீவிர விசாரணை


பஸ்சில் இருந்து இறங்கிய கரூர் துணை தாசில்தார் சாக்கடை கால்வாயில் விழுந்து பலி - போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 10:03 PM GMT)

திண்டுக்கல்லில் பஸ்சில் இருந்து இறங்கிய கரூர் துணை தாசில்தார் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்,

மதுரை ஆனையூரை சேர்ந்த சீனிவாசன் மகன் மேகநாதன் (வயது 45). இவர் கரூர் மாவட்டம் கடவூரில் துணை தாசில்தாராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும், சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதற்காக அவர் கரூரில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் பயணம் செய்தார்.

திண்டுக்கல் பேகம்பூர் யானைதெப்பம் பஸ்நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து அவர், இறங்கியதாக தெரிகிறது. அப்போது அருகில் உள்ள பெரிய சாக்கடை கால்வாய்க்குள் அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் அடிபட்டதால் அவர் மயங்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மேகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் இருந்து பஸ்சில் ஏறிய அவர், யானைதெப்பம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியது ஏன்? பஸ்சில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டாரா? என்பது தெரியவில்லை.

மேலும் சாக்கடை கால்வாயில் எப்படி தவறி விழுந்தார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன துணை தாசில்தார் மேகநாதனுக்கு, செல்வி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். 

Next Story