நவநிர்மாண் சேனா தொண்டர் தீக்குளித்து சாவு ராஜ்தாக்கரேக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் விரக்தி?
மராட்டியத்தில் நவநிர்மாண் சேனா தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்தார். ராஜ்தாக்கரேக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் தான் அவர் உயிரை விட்டதாக அக்கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.
தானே,
மராட்டியத்தில் நவநிர்மாண் சேனா தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்தார். ராஜ்தாக்கரேக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் தான் அவர் உயிரை விட்டதாக அக்கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.
தொண்டர் தற்கொலை
தானே மாவட்டம் கல்வா பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது27). சுற்றுலா கார் டிரைவர். இவர் ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியின் தொண்டர் ஆவார். தனியாக வசித்து வந்த இவரது வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கரும்புகை வெளியேறியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது, பிரவீன் மண்எண்ணெயை ஊற்றி உடலில் தீவைத்து இருந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரவீனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் பிரவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?
தற்கொலை செய்த வாலிபர் போதைக்கு அடிமையாகி மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், அவர் ஏற்கனவே இரண்டு மூன்று முறை தற்கொலைக்கு முயன்று இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை என்றும் போலீசார் கூறினர்.
இதற்கிடையே ராஜ் தாக்கரேக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விரக்தியில் தான் பிரவீன் தற்கொலை செய்துகொண்டதாக நவநிர்மாண் சேனா கட்சியினர் கூறி உள்ளனர்.
இது குறித்து அக்கட்சியின் தானே மாவட்ட செய்தி தொடர்பாளர் நைனேஷ் படான்கர் கூறுகையில், ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் தீவிர தொண்டரான பிரவீன் விரக்தியிலும், சோகத்திலும் இருந்துள்ளார். தற்கொலை செய்துகொள்ளும் முன்பு அவர் இதுகுறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்” என்றார்.
Related Tags :
Next Story