வீராணம் ஏரிக்கு வந்தது காவிரி நீர் - விவசாயிகள் மகிழ்ச்சி
கீழணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் நேற்று மதியம் வீராணம் ஏரிக்கு வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோ மீட்டர் நீளம், 5.6 கிலோ மீட்டர் அகலம், 48 கிலோ மீட்டர் சுற்றளவு என பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். மேலும் வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய பங்கு இந்த ஏரிக்கு உண்டு. அதாவது வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கும் அளவை பொறுத்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி நீர் கொண்டு செல்லப்பட்டு, மாநகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த 13-ந் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும், கடந்த 17-ந் தேதி பாசனத்துக்காக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட நீர், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது.
கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 5 அடியை எட்டியதும், வடவாறு வழியாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட்டனர். அதாவது வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த காவிரி நீர் கடைமடை பகுதியான வீராணம் ஏரிக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தது. இதையடுத்து வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.50 அடியில் நேற்று மாலை நிலவரப்படி நீர்மட்டம் 39.70 அடியை எட்டியுள்ளது. மேலும் சென்னை மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வீராணம் ஏரிக்கு காவிரி நீர் தொடர்ந்து வருவதாலும், நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதாலும் வீராணம் ஏரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தடைந்ததை வரவேற்கும் வகையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி இளங்கீரன் தலைமையில் விவசாயிகள் வடவாற்றில் பாய்ந்தோடி வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர். அதேபோல் வீராணம் ஏரிக்குள் வந்த தண்ணீரை வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலு தலைமையில் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
Related Tags :
Next Story