மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தி பா.ஜனதாவை விட்டு விலக உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. முடிவு? சித்தராமையாவை சந்திக்கவும் திட்டம்


மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தி பா.ஜனதாவை விட்டு விலக உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. முடிவு? சித்தராமையாவை சந்திக்கவும் திட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2019 3:30 AM IST (Updated: 22 Aug 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

மந்திரி பதவி கிடைக்காததால் பா.ஜனதாவை விட்டு விலக உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. முடிவு செய்துள்ளதாகவும், அவர் சித்தராமையாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு, 

மந்திரி பதவி கிடைக்காததால் பா.ஜனதாவை விட்டு விலக உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. முடிவு செய்துள்ளதாகவும், அவர் சித்தராமையாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மந்திரி பதவி கிடைக்கவில்லை

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடந்த மாதம்(ஜூலை) 26-ந் தேதி, முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

25 நாட்களுக்கு பிறகு கடந்த 20-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 17 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. பா.ஜனதாவில் மூத்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான உமேஷ்கட்டிக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதி என்று தகவல்கள் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் உமேஷ்கட்டி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

எச்சரிக்கை விடுத்தார்

2-வது முறை மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும்போது, தனக்கு மந்திரி பதவி வழங்காவிட்டால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்வேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். உமேஷ்கட்டியை அழைத்து எடியூரப்பா பேச்சுவார்த்தை நடத்தினார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், சிறிது காலம் பொறுமையாக இருக்கும்படியும் உமேஷ் கட்டியிடம், எடியூரப்பா அறிவுறுத்தினார். ஆயினும், உமேஷ்கட்டி சமாதானம் அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் உமேஷ்கட்டி, பா.ஜனதாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேச அனுமதி வழங்குமாறு அவர் கேட்டுள்ளார். இதற்கு சித்தராமையா அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் காங்கிரசில் சேருவார் என்றும் இன்னொரு தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடக்கத்திலேயே சிக்கல்

உமேஷ்கட்டி போர்க்கொடி தூக்கி இருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதா அரசுக்கு தொடக்கத்திலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எடியூரப்பா, கட்சி மேலிடத்தின் அனுமதியை பெற்று, மந்திரிசபையை மீண்டும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது உமேஷ்கட்டி, ரேணுகாச்சார்யா உள்ளிட்ட சிலர் மந்திரிசபையில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஆண்டு(2018) நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த லட்சுமண் சவதிக்கு மந்திரி பதவி வழங்கியதற்கு, பா.ஜனதாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெற்றிபெற்ற மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கே வாய்ப்பு கிடைக்காதபோது, தோல்வி அடைந்தவருக்கு மந்திரிசபையில் இடம் கொடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் எடியூரப்பா திணறுவதாக கூறப்படுகிறது.

லட்சுமண் சவதி

இதற்கிடையே அதானி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மகேஷ் குமட்டள்ளி போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சட்டசபையில் அதானி தொகுதி காலியாக உள்ளது. 6 மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், பா.ஜனதா சார்பில் மந்திரி லட்சுமண் சவதி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

லட்சுமண் சவதி அங்கு போட்டியிட்டால், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ. மகேஷ் குமட்டள்ளியின் நிலை என்ன என்று, ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிற எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதா தலைவர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். மகேஷ் குமட்டள்ளிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாவிட்டால், தங்களின் நிலை என்ன என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

Next Story