ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில், சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம்,தனுஷ்கோடி பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. சூறாவளி காற்றால் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலையில் பல இடங்களில் மணல் மூடியுள்ளது. மணல் மூடப்பட்ட பகுதியில் ஜே.சி.பி. மூலம் மணல் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன் பிடி துறைமுகத்தை தாண்டி பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறி எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு மீன்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு மீன்பிடி டோக்கன் பெறும் அலுவலகத்தின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த எச்சரிக்கை அறிவிப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் காற்று வீசக் கூடும் என்பதாலும், கடல் அலைகள் சுமார் 3 மீட்டர் உயரம் வரையிலும் எழக்கூடும் என்பதாலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நங்கூரமிட்டு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மீன்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று மீன்பிடிக்க செல்ல வேண்டிய பாம்பன் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 100 விசைப் படகுகள் தென் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story