ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில், மத்திய அரசின் மசோதா நகலை கிழித்தெறிந்து மீனவர்கள் போராட்டம்


ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில், மத்திய அரசின் மசோதா நகலை கிழித்தெறிந்து மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2019 4:00 AM IST (Updated: 23 Aug 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

மீனவர்களுக்கு எதிரான மசோதாக்களை கைவிட கோரி ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் மத்திய அரசின் மசோதா நகலை கிழித்தெறிந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

மீனவர்களின் வாழ்வுரிமைகளை அழிக்கும் கடலோர மண்டல மேலாண்மை அறிக்கையை 2019-ஐ ரத்து செய்யக்கோரியும்,கடற்கரை ஒழுங்கு முறை மண்டலம் 1991-ஐ பின்பற்றி புதிய சட்டம் இயற்றவும், கடலை தனியார் முதலாளிகளுக்கு பட்டா போட்டு கொடுக்க வழிவகை செய்யும் கடல் மீன் வளர்ப்பு மசோதா,மீன் மற்றும் கருவாடுகள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யவேண்டும். கடலோர பகுதிகளில் மீனவர்களின் வாழ்வை சூறையாடும் இறால் பண்ணைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க கடலுக்குள் பாலம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்களுக்கு எதிரான மத்திய அரசின் மசோதாக்களின் நகலுடன் ராமேசுவரத்தில் நேற்று தமிழ்நாடு மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் மீனவர்கள் அக்னிதீர்த்த கடற்கரைக்கு ஊர்வலமாக வந்தனர்.

அங்கு மாநில செயலாளர் செந்தில்வேல் தலைமையில் மாநிலக்குழு நிர்வாகிகள் என்.பி.செந்தில், வடகொரியா, அந்தோணிபீட்டர், தாலுகா துணை செயலாளர் காளிதாஸ், மாவட்ட செயல் தலைவர் ரமணி உள்பட ஏராளமானோர் மத்திய அரசின் மசோதா நகலுடன் அக்னி தீர்த்த கடலில் இறங்கி கோஷமிட்டனர். அப்போது மத்திய அரசின் மசோதா நகலை கடலில் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் போராட்டம் நடத்திய அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர். பாதுகாப்பு பணியில் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், ஜோதிபாசு உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். 

Next Story