மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்


மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்
x
தினத்தந்தி 23 Aug 2019 12:00 AM GMT (Updated: 22 Aug 2019 7:28 PM GMT)

மதுரையில் சேவல் சண்டை முன்விரோதத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை,

மதுரை புதூர் ராமவர்மநகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் புதூர் ஜவகர்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதிக்கு சென்றார்.

அப்போது அவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக வழிமறித்து ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ராஜாவை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது தெளிவாக இருந்தது. அதை தொடர்ந்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த கொலை தொடர்பாக ஒரு இடத்தில் பதுங்கி இருந்த 8 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ஆனால் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களிடம் ராஜா கொலைக்கான பின்னணி என்ன? என்பது குறித்து விசாரித்த போது மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.

இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

சில வருடங்களுக்கு முன்பு புதூர் மண்மலை மேட்டுத்தெருவை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரும், புதூர் ராமவர்மநகரை சேர்ந்த கார்த்திக் என்பவரும் சேவல் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் ஸ்ரீதரின் சேவல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. எனவே அவர் மீது கார்த்திக் தரப்பினருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட பகையில் கடந்த 2016-ம் ஆண்டு ஸ்ரீதரை வாடிப்பட்டிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 5-வது நபராக ராஜா சேர்க்கப்பட்டு இருந்தார்.

அந்த கொலைக்கு ராஜாவை பழிவாங்க ஸ்ரீதர் தரப்பினர் காத்திருந்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில்தான் ஜவகர்புரத்தில் மதுக்கடை பார் நடத்தி வரும் மாரிமுத்து உடன் சேர்ந்து ராஜா நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு மது அருந்த சென்றுள்ளார். அங்கு மது குடித்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுத்து கிளம்ப முயன்றார். அப்போது மது கடைக்கு எதிரே உள்ள காலி இடத்தில் காத்திருந்த ஒரு கும்பல் சுவர் ஏறி குதித்துள்ளது. அந்த கும்பல் ராஜா மீது பெரிய குழவி கல்லை தூக்கி எறிந்துள்ளது. அதில் நிலை தடுமாறி ராஜா கீழே விழுந்தார். பின்னர் சுதாரித்து எழுந்து உயிர் பிழைக்க சில மீட்டர் தூரம் ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை விரட்டி சென்று நடுரோட்டில் வெட்டியும், குத்தியும் கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகின்றன. அதில் ராஜாவை ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இது காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.

இந்த காட்சிகள் மேலும் பரவாமல் தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் சேவல் சண்டையால் ஏற்பட்ட பகையில் சிறுவர்கள் அடங்கிய கும்பலை வைத்து ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டதின் முழுமையான பின்னணி என்ன? என்பதை அறியவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story