அமராவதி ஆற்றில் கடைமடை வரை தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள்


அமராவதி ஆற்றில் கடைமடை வரை தண்ணீர் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 8:16 PM GMT)

அமராவதி ஆற்றில் கரூரின் கடைமடை வரை தண்ணீர் திறந்துவிடக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

திருப்பூர் அமராவதி அணையிலிருந்து கடந்த 14-ந்தேதி மாலை முதல் 2,000 கனஅடி தண்ணீர் கரூர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக அந்த தண்ணீர் குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கரூர் கடைமடை வரை அமராவதி ஆற்று தண்ணீர் வரவில்லை எனவும், இதனால் சம்பா சாகுபடி பணிகளை தொடங்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறி கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்டோர் விவசாயிகள் சங்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆகஸ்டு 22-ந்தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப் படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். அந்தவகையில் நேற்று அந்த சங்கத்தின் தலைவர் ராமசாமி, செயலாளர் ராமலிங்கம் உள்பட விவசாயிகள் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் உள்ளே செல்ல முற்பட்டபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

போலீசாருடன் வாக்குவாதம்

அப்போது, கரூர் அமராவதி ஆற்றில் விவசாய பணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் பொருட்டு கடைமடை வரை தண்ணீர் செல்ல அமராவதி அணையின் பொறியாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று பாசனத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதற்கிடையே துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மறியல் போராட்டம் நடத்தப்படும்

ஜனநாயக நாட்டில் கலெக்டரை விவசாயிகள் சந்திக்க அனுமதி மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் இனியும் கரூர் கடைமடை வரை தண்ணீர் செல்ல வழிவகை செய்யப் படாவிட்டால் ஆடு, மாடுகளை சாலையில் கட்டி விட்டு ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story