பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் - கலெக்டர் பேச்சுவார்த்தை


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் - கலெக்டர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 8:31 PM GMT)

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருவண்ணாமலை,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமை தாங்கினார். இதில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் அப்பாண்டைநயினார், தெள்ளார் ஒன்றிய தலைவர் லீலாவினோதன், செயலாளர் சக்கரபாணி, நிர்வாகிகள் சந்தானம், சுப்பிரமணி, கண்ணன், சிவக்குமார், புருசோத்தமன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். 2016-17-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை உடனடியாக வழங்க வேண்டும். செய்யாறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையை முழுவதுமாக வட்டியுடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை - போளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே இருந்ததால் அவர்களால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். மேலும் விவசாயிகள் சிலர் சாலையில் படுத்தபடி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த மறியல் போராட்டம் போலீசாரின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர்.

கலெக்டர் கார் நிறுத்தும் இடத்துக்கு சென்றதும் மீண்டும் விவசாயிகள் கோரிக்கைகயை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகுந்து முதல் தளத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகில் சென்று அரை நிர்வாணமாக மாறி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு வந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கலெக்டர் அலுவலகத்தில் இப்படி செய்ய கூடாது. உங்களது கோரிக்கை என்னவென்று சொல்லுங்கள் எங்களால் முடிந்தவரை செய்து தருகிறோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் இது போன்ற புது கலாசாரத்தை ஏன் உருவாக்குகிறீர்கள். திருவண்ணாமலை விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம்.

எங்கள் மாவட்ட விவசாயிகள் இப்படி செய்ய மாட்டார்கள். வெளியூரில் இருந்து வரும் சிலர் தேவையற்ற இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நான் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். தினமும் எவ்வளவு நேரமானாலும் விவசாயிகள் இருந்தால் அவர்களை சந்தித்து விட்டு தான் செல்கிறேன். இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்றார்.

இதையடுத்து அய்யாகண்ணு உள்பட விவசாயிகள் அங்கிருந்து வெளியில் வந்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டருக்கு மனு அளிப்பது தொடர்பாக விவசாயிகள் ஒன்று கூடி முடிவு செய்தனர். தொடர்ந்து அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் அய்யாகண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு குடிநீருக்கு வறட்சி என்று அரசாணையில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. குடிநீருக்கே வறட்சி என்றால் விவசாயம் பண்ண முடியுமா? அரசு விவசாயத்தையும் வறட்சி என்று அறிவித்து இருக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து இருக்க வேண்டும். புதிய கடனை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

2016-17-ம் ஆண்டு பயிர்களுக்கு காப்பீடு செய்து இருந்தோம். அது இன்னும் தரவில்லை. விவசாயிகளை இந்த நாட்டினுடைய அடிமைகளாக பார்க்கின்றனர். எங்களுக்கு கடன் தள்ளுபடி வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். கரும்புக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை பெற்று தர வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம்.

தற்போது குடிமராமத்து பணிகள் நடக்கிறது. ஆனால் ஏரிகள் ஒழுங்காக தூர்வாரவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வில்லை என்றால் சென்னைக்கு சென்று கடலில் அனைவரும் குதிக்க போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story