செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த பாட்டி-பேரன் மீட்பு


செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த பாட்டி-பேரன் மீட்பு
x
தினத்தந்தி 23 Aug 2019 4:00 AM IST (Updated: 23 Aug 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த பாட்டி மற்றும் பேரனை அதிகாரிகள் மீட்டனர்.

அந்தியூர், 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காளி பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவர் மயிலாடுதுறையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

மயிலாடுதுறை காளி பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மனைவி சாந்தி, அவருடைய பேரன் டேவிட் ராஜ் (வயது 9) என்பவனுடன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தாசரியூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கடந்த சில ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்து வருகிறார்கள். அதனால் சாந்தியையும், டேவிட் ராஜையும் மீட்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ., அந்த மனுவை ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு அனுப்பி வைத்தார். அதன்பேரில் கலெக்டர் கதிரவன், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் தாசரியூரில் உள்ள அந்த செங்கல் சூளைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது மயிலாடுதுறையை சேர்ந்த சாந்தியிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டது.

இதில் சாந்தி கடந்த சில ஆண்டுகளாக அந்த செங்கல்சூளையில் கொத்தடிமையாக வேலை செய்து வந்ததும், பேரன் டேவிட் ராஜை அவருடன் தங்க வைத்திருந்ததும் தெரிய வந்தது. மேலும் டேவிட் ராஜ் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.

சாந்தி தான் வாங்கிய பணத்தை செங்கல் சூளை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொத்தடிமைகளாக இருந்த 2 பேரும் மீட்கப்பட்டு, மயிலாடுதுறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story