ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஈரோட்டில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு,
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த 19-ந் தேதி சேலம் மாவட்டத்தில் அவர் முகாமை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் தொடங்கியது.
ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதேபோல் 2-வது மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமிலும் மாவட்ட கலெக்டர் கதிரவன் கலந்துகொண்டு மனுக்களை பெற்றார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதியான மனுக்களுக்கு அமைச்சர்கள் மூலம் விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும். இந்த முகாம் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் ஈரோடு கிழக்கு கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், ஈரோடு தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story