நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் புளியங்குடி பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அதில், சிலர் கூண்டு, வலை ஆகியவற்றை கையில் வைத்து இருந்தனர். பல மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வந்து இருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் கிராம மக்கள் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
நாங்கள் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தற்போது புளியங்குடி 1-வது வார்டு கிராம சாவடி தெருவில் வசித்து வருகிறோம். வேட்டையாடுவது எங்கள் குல தொழில். தற்போது வேட்டையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், ஊர், ஊராக சென்று பானிபூரி, பிளாஸ்டிக் பொருட்கள் விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம்.
எங்கள் குழந்தைகள் 10-ம் வகுப்பு வரை தான் படிக்க முடிகிறது. அதற்கு மேல் படிக்க காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் கிடைப்பது இல்லை. இதனால் எங்கள் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கிறது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். நாங்கள் கொடுத்த மனுக்களின் அடிப்படையில் கலெக்டர் பரிந்துரையின் பேரில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை செய்கிறார்கள். ஆனால் சான்றிதழ் தர மறுக்கிறார்கள். எங்களுக்கு காட்டு நாயக்கர் சாதி சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story