திருமண மண்டபங்களில் குடிநீர் பாட்டிலுக்கு தடை - கலெக்டர் உத்தரவு
திருமண மண்டபங்களில் குடிநீருக்காக வைக்கப்படும் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியுள்ளார்.
திருவண்ணாமலை,
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உள்ளது.
இந்த 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் சேகரிப்பு, பயன்பாடு, உற்பத்தி, வினியோகம், விற்பனை ஆகியவற்றில் ஈடுபடும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் சமீபகாலமாக திருமண மண்டபங்களில் குடிநீர் பாட்டில்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. விசேஷங்களின் போது திருமண மண்டபங்களில் குடிநீரானது 300 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் வரையிலான கொள்ளளவு கொண்ட பாட்டில்களில் வழங்கப்படுகிறது.
இதனால் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வது சவாலான பணியாக உள்ளது. குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இதனை தவிர்க்கும் வகையில் அனைத்து திருமண மண்டபங்களிலும் நீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டு விசேஷங்களின் போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரினை எவர்சில்வர் மற்றும் இதர உலோகக் குவளைகள் மூலம் பரிமாற வேண்டும்.
மேலும் குடிநீர் பாட்டில்களின் உபயோகத்தினை முற்றிலும் தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனை செயல்படுத்தாத திருமண மண்டபங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story