வெள்ளகோவிலில், கார்-லாரி நேருக்கு நேர் மோதல்; கோவை தம்பதி பலி - மகன்-மகள் காயம்
வெள்ளகோவிலில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கோவையை சேர்ந்த தம்பதி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் அவர்களது மகன், மகள் காயம் அடைந்தனர்.
வெள்ளகோவில்,
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ் வரன் (வயது 51). இவரது மனைவி தேவிகா மலர் (47). இவர்களுக்கு லத்திகா (15) என்ற மகளும், கோகன் (13) என்ற மகனும் உள்ளனர். சித்தேஸ்வரன் கோவை ஈச்சனாரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் சித்தேஸ்வரனின் தாயார் சுப்புலட்சுமி கடந்த 4-ந் தேதி திருச்சியில் இறந்து விட்டார். அதனால் திருச்சிக்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்த சித்தேஸ்வரன் கடந்த 15 நாட்களாக அங்கு தங்கியிருந்து தாயாரின் இறுதிச்சடங்குகளை எல்லாம் செய்து முடித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சித்தேஸ்வரன் தனது காரில் மனைவி, மகள், மகன் ஆகியோருடன் புறப்பட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை சித்தேஸ்வரன் ஓட்டிக்கொண்டு வந்தார். இரவு 10.15 மணிக்கு கரூர்-கோவை ரோட்டில் வெள்ளகோவிலை கடந்து கார் சென்றுகொண்டிருந் தார். அந்தபகுதியில் உள்ள ஒரு தனியார் பிஸ்கெட் கம்பெனி அருகே கார் சென்ற போது எதிரே திருப்பூரில் இருந்து கரூருக்கு மணல் பாரம் ஏற்ற வந்துகொண்டிருந்த டிப்பர் லாரியும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவர் களை மீட்டு ஆம்புலன்சு மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள், சித்தேஸ்வரன் மற்றும் அவரது மனைவி தேவிகாமலர் ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுமி லத்திகா, சிறுவன் கோகன் ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ஜெயபாலன், சப்-இன்ஸ்பெக்டர்விஜய பாஸ்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான பரமத்திவேலூரை சேர்ந்த தியாகராஜன் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story