கோவையில், சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் பிரபல ரவுடி, போக்சோ சட்டத்தில் கைது


கோவையில், சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் பிரபல ரவுடி, போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 23 Aug 2019 4:30 AM IST (Updated: 23 Aug 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் பிரபல ரவுடி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் தப்பி ஓடும்போது கால் முறிந்ததால் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை,

கோவை புலியகுளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் என்ற ஜோஸ்வா(வயது 24). இவர் மீது ராமநாதபுரம் பகுதியில் வாலிபரை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடை கால்வாய்க்குள் வீசிய வழக்கு உள்பட 2 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி, நகை பறிப்பு, வழிப்பறி, கஞ்சா விற்பனை என மொத்தம் 33 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு இருந்தார். மேற்குறிப்பிட்ட வழக்குகளில் ஜாமீனில் விடுதலையான ஜோஸ்வா, தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் பிளஸ்-1 படித்து வந்த 16 வயது சிறுமி ஒருவரை திருமண ஆசை வார்த்தை கூறி அன்னூர் பகுதிக்கு கடத்திச்சென்று அறையில் அடைத்து வைத்து ஜோஸ்வா கற்பழித்ததாக தெரிகிறது. இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது ரவுடி ஜோஸ்வா சிறுமியை கடத்தி கற்பழித்து தன்னுடன் வைத்திருப்பது தெரியவந்தது.

உடனே அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆனால் ரவுடி ஜோஸ்வா போலீசில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் ஒரு இடத்தில் அவர் பதுங்கி இருக்கும் தகவலை தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது போலீசை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். இதில் கீழே தவறி விழுந்து அவரது இடது கால் முறிந்தது. பின்னர் போலீசார் அவரை பிடித்தனர். தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜோஸ்வா, கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜோஸ்வா, ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story