பாகூர் அருகே, தொடர் மழையால் குடிசை வீடு இடிந்து விழுந்தது


பாகூர் அருகே, தொடர் மழையால் குடிசை வீடு இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 23 Aug 2019 3:30 AM IST (Updated: 23 Aug 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே தொடர் மழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

பாகூர்,

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் குடிசை வீடுகளின் மண் சுவர்கள் வலுவிழந்து வருகின்றன.

இந்த நிலையில் வங்க கடலில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது.

பாகூர் அருகே கொமந்தான்மேடு வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது கணவர் தட்சணாமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மஞ்சுளா தனது 2 பிள்ளைகள் மற்றும் தாயாருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக அவரது குடிசை வீட்டின் முன்பக்க சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா, தனது பிள்ளைகள், தாயாருடன் வீட்டில் இருந்து அலறி அடித்து வெளியே ஓடிவந்தார்.

வீட்டின் மற்றொரு புறத்தில் மஞ்சுளா தனது குடும்பத்தினருடன் தூங்கியதால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.

இதுபற்றி அறிந்த பாகூர் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு சென்று இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டனர். மஞ்சுளா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அதிகாரிகள், அரசின் நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story