வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்


வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்
x
தினத்தந்தி 24 Aug 2019 2:15 AM GMT (Updated: 23 Aug 2019 12:07 PM GMT)

வெண்கல மற்றும் செம்பு நாணயங்களை துக்ளக் அறிமுகப்படுத்தினார்.

துக்ளக் வம்சத்தின் இரண்டாவது சுல்தானான முகமது பின் துக்ளக், மனம் போன போக்கில் நடந்த மன்னர் என்று வரலாற்றாசிரியர்கள் பலர் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் ஒரு பெரும் வீரர், கவிஞர், அறிஞர், மொழியியல் நிபுணர், கணித ஆர்வலர் எனப் பலருக்குத் தெரியாது.

துக்ளக்கிடம் யோசனைகளுக்குக் குறைவேயில்லை. ஆனால் விவசாயம், வர்த்தகம் முதல், நிர்வாகம் வரை அனைத்திலும் அவர் அதிரடியாகவும் உடனடியாகவும் மாற்றங்களைக் கொண்டு வர முயன்றதுதான் இன்றுவரை விவாதத்துக்கு உரியதாக இருக்கிறது.

1330-ம் ஆண்டுவாக்கில் தனது தேசத்தில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டபோது, வெண்கல மற்றும் செம்பு நாணயங்களை துக்ளக் அறிமுகப்படுத்தினார். அவற்றுக்கு, அக்காலத்தில் புழங்கிய தங்க, வெள்ளி நாணயங்களுக்கு இணையான மதிப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் வெண்கலமும், செம்பும் மலிவான உலோகங்கள் என்பதால், பலரும் அம்மாதிரி நாணயங்களைத் தயாரித்துக் குவிக்கத் தொடங்கினர். அரசாங்கம் அந்த நாணயங்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய சில மாதங்களிலேயே நாடு முழுவதும் போலி நாணயங்கள் பெருவாரியாக புழங்கத் தொடங்கின. வர்த்தகம் தொடங்கி அனைத்திலும் கடும் சிக்கல் ஏற்பட்டது.

தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து, வெண்கல, செம்பு நாணயங்களுக்குத் தடை விதித்தார், சுல்தான் துக்ளக். அதேநேரம், பழைய வெண்கல, செம்பு நாணயங்களைக் கொடுத்து தங்க, வெள்ளி நாணயங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

அனேகமாக இந்தியாவில் நடைபெற்ற முதல் ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை’ அதுதான்.

மக்கள் தங்களிடம் இருந்த வெண்கல, செம்பு நாணயங்களை மாற்றிக்கொள்ள வந்தபோது, போலி நாணயங்கள் கண்டுபிடித்து ஓரங்கட்டப்பட்டன.

அப்போது ஒதுக்கி வைக்கப்பட்ட போலி நாணயங்கள், தலைநகர் துக்ளகாபாத்தில் மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்ததாக அந்நாளைய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Next Story