மாவட்ட செய்திகள்

டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம் + "||" + In the tanker truck The motorcycle entered Engineering student kills

டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்

டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்
டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்து, என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
பூந்தமல்லி,

சென்னை முகப்பேர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் நிர்மல்(வயது 18). இவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கேலட்பென்னி(18). இவரும் அதே கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர்.


மோட்டார் சைக்கிளை நிர்மல் ஓட்டினார். அவருக்கு பின்னால் கேலட்பென்னி அமர்ந்து இருந்தார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் ஏரி அருகே வேகமாக சென்றபோது, முன்னால் சென்ற டேங்கர் லாரியின் பின்பகுதியில் மோட்டார்சைக்கிள் புகுந்து சொருகி நின்றது. மோதிய வேகத்தில் டேங்கர் லாரியின் பின்புறம் உள்ள இரும்பு கம்பியில் தலை மோதியதில் நிர்மல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னால் அமர்ந்து இருந்த அவருடைய நண்பர் கேலட்பென்னி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான நிர்மல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரைவரான குப்பா பிள்ளை(54) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை போரூர், வன்னியர் தெருவை சேர்ந்தவர் பெருமாள்(58). கட்டிடத்தொழிலாளி. நேற்று காலை டீ கடைக்கு செல்ல போரூர்-குன்றத்தூர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது போரூர் நோக்கி வந்த லோடு ஆட்டோ பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பெருமாள், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லோடு ஆட்டோ டிரைவர் வெங்கடேசன்(24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் பாரதி (30). இவர் சமையல் அறை புகை கூண்டு தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையம் எதிரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றபோது நிலைதடுமாறி லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டார். லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பாரதி தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான பாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் கார்த்திக் (37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.