திருவள்ளூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வை 7 ஆயிரத்து 145 பேர் எழுதுகின்றனர் போலீஸ் சூப்பிரண்டு தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வை 7 ஆயிரத்து 145 பேர் எழுதுகின்றனர் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 23 Aug 2019 10:30 PM GMT (Updated: 23 Aug 2019 5:15 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வை 7 ஆயிரத்து 145 பேர் எழுதுகின்றனர் என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வுக்குழுமம் மூலம் 2019-ம் ஆண்டுக்கான 2-ம் நிலைக்காவலர்கள், 2-ம் நிலை சிறைக்காவலர்கள்(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொது எழுத்துத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த தேர்வானது திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இதில் ஆண்கள் 6 ஆயிரத்து 283 பேர், பெண்கள் 862 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 145 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு வர வேண்டும்.

விண்ணப்பதாரர் தேர்வுக்கூட நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தை மாற்றம் செய்ய இயலாது. நுழைவு சீட்டு கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டை ஏதேனும் இருப்பின் அவற்றின் நகலை கொண்டு வருவது உகந்தது. (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவைகள்). தேர்வு தொடங்கிய பின் விண்ணப்பதாரர் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன், கால்குலேட்டர் போன்றவை தேர்வு மையம் மற்றும் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

விண்ணப்பதாரர் தேர்வு நேரத்தில் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ கூடாது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story