பெரம்பலூர் அருகே, ஆற்றில் குளித்த 2 மாணவிகள் சாவு


பெரம்பலூர் அருகே, ஆற்றில் குளித்த 2 மாணவிகள் சாவு
x
தினத்தந்தி 24 Aug 2019 4:00 AM IST (Updated: 23 Aug 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே மருதையாற்றில் குளித்த 2 மாணவிகள் உயிரிழந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சாத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம்-அழகேஸ்வரி தம்பதியின் மகள் சீதா (வயது 13). அதே ஊரை சேர்ந்த செல்வராஜூ-வேம்பு தம்பதியின் மகள் மஞ்சுளா (13). கந்தசாமி மகள் பிரியா (14). இவர்கள் 3 பேரும் தோழிகள் ஆவார்கள். சீதா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும், மஞ்சுளா கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், பிரியா 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

சீதாவின் தந்தை ராஜாங்கமும், மஞ்சுளாவின் தந்தை செல்வராஜூம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மதியம் தங்களது வீட்டின் அருகே சீதா, மஞ்சுளா, பிரியா ஆகிய 3 பேரும் விளையாடி கொண்டிருந்தனர்.

தற்போது சாத்தனூர் குடிக்காடு கிராமத்தின் அருகே உள்ள மருதை ஆற்றில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அங்கு சென்று குளிப்பதற்கு முடிவெடுத்த சீதா, மஞ்சுளா, பிரியா ஆகிய 3 பேரும் அங்கு சென்றனர்.

அப்போது நீச்சல் தெரியாத மாணவிகள் சீதா, மஞ்சுளா ஆகியோர் மருதை ஆற்றில் பாலம் கட்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கி குளிக்க தொடங்கினர்.

ஆனால் பிரியா குளிக்காமல் கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது குளிக்க சென்ற தோழிகள் சீதா, மஞ்சுளா ஆகியோர் வெகுநேரமாகியும் மேலே வராததால்பிரியா, அவர்கள் குளிக்க இறங்கிய இடத்திற்கு சென்று தேடினார். ஆனால் அங்கு தோழிகள் காணாததால் பிரியா அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கிராமத்திற்கு ஓடிச்சென்று நடந்த விபரத்தை தனது உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் அழுதவாறு பதற்றத்துடன் கூறினார்.

இதையடுத்து கிராம மக்கள் மற்றும் மாணவிகளின் உறவினர்கள் மருதையாற்றுக்கு விரைந்து சென்று மாணவிகள் குளித்த இடத்தில், அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது சீதாவும், மஞ்சுளாவும் தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட் டது. பின்னர் அவர்களது உடல்களை மீட்டு கரையோரத்திற்கு கொண்டு வந்தனர்.

அப்போது சீதா, மஞ்சுளாவின் உடல்களை பார்த்து, அவர்களது தாயார்கள் மற்றும் உறவினர்கள், மாணவி பிரியா கதறி அழுதது காண்போரின் கண்களை குளமாக்கியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருவத்தூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கி உயிரிழந்த மாணவிகள் சீதா, மஞ்சுளா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story