திண்டிவனம் அருகே, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், ரெயில் மோதி பலி - போலீஸ் விசாரணை
திண்டிவனம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ரெயில் மோதி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணம் காலனியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் ஜான்சிராணி (வயது24). இவர் கூட்டேரிப்பட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் ஜான்சிராணிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி ஜான்சிராணிக்கும் கீழ்வயலாமூரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணத்தை வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து இருவீட்டாரும் பத்திரிகை அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர்.
நேற்று காலை ஜான்சிராணி வழக்கம்போல் தான் பணிபுரியும் ஜவுளிக்கடைக்கு புறப்பட்டார். அதேஊரில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜான்சிராணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு ரெயில் நிறுத்தப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். ரெயில் மோதியதில் பலியான ஜான்சிராணியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே இந்த விபத்து பற்றி செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, பலியான ஜான்சிராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் அங்கு நின்று சென்றது.
விபத்து குறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story