டெல்லியில் முகாமிட்டுள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷாவை சந்திக்க பிடிவாதம் எடியூரப்பாவின் சமாதானத்தை ஏற்க மறுப்பு
டெல்லியில் முகாமிட்டு உள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரி பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
டெல்லியில் முகாமிட்டு உள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரி பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக எடியூரப்பாவின் சமாதானத்தையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மகேஷ் குமடள்ளி
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். 25 நாட்களுக்கு பிறகு மந்திரிசபையை விரிவாக்கம் செய்த எடியூரப்பா, 17 பேருக்கு மந்திரி பதவி வழங்கினார்.
இவர்களில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் தோல்வி அடைந்த லட்சுமண் சவதியும் ஒருவர் ஆவார். தேர்தலில் தோற்றவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டதற்கு பா.ஜனதாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அந்த அதானி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மகேஷ் குமடள்ளி வெற்றி பெற்றார்.
கடும் அதிருப்தி
அவர் பா.ஜனதா ஆட்சி அமைய வசதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அதானி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் மந்திரி லட்சுமண் சவதியை நிற்க வைக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மகேஷ் குமடள்ளிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் மந்திரிசபையில் தங்களுக்கான இடம் மற்றும் இலாகா குறித்தும் அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
10 நாட்களில் மந்திரி பதவி
இதனால் ஆதங்கம் அடைந்துள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக முதல்-மந்திரி எடியூரப்பாவும் நேற்று டெல்லி சென்றார்.
அங்கு ஒரு ரகசிய இடத்தில் அவர்களை எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது எடியூரப்பா, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி உங்களுக்கு மந்திரி பதவி வழங்க மந்திரிசபையில் 16 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது என்றும், சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்த 10 நாட்களில் மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அமித்ஷாவை சந்திக்க பிடிவாதம்
மேலும் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிரான மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வக்கீல் மூலம் தேவையான ஏற்பாடுகளை செய்வதாகவும் எடியூரப்பா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஏற்க மறுத்த அவர்கள், அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு பிடிவாதமாக கூறினர்.
அதற்கு பதிலளித்த எடியூரப்பா, அமித்ஷா உங்களை நேரடியாக சந்தித்து பேசினால், அதனால் உங்களின் சட்ட போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்படும் நிலை உள்ளதாகவும், அதனால் என் பேச்சை நம்புங்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள், 10 நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, அமித்ஷாவை சந்தித்த பிறகே பெங்களூரு திரும்புவோம் என்று அவர்கள் பிடிவாதம் பிடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story