ஜெகதளாவில், மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு - ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம்


ஜெகதளாவில், மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு - ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம்
x
தினத்தந்தி 24 Aug 2019 3:45 AM IST (Updated: 23 Aug 2019 11:30 PM IST)
t-max-icont-min-icon

ஜெகதளாவில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பாலாஜி நகரில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மதுக்கடையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இதையடுத்து அந்த மதுக்கடை மூடப்பட்டது. இதற்கிடையில் நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் தாங்கள் வசிக்கும் கிராமங்களில் மது மற்றும் புகையிலை பயன்பாட்டுக்கு தடை விதித்து, அறிவிப்பு பலகைகளை வைத்து உள்ளனர். இதில் ஜெகதளா கிராமமும் அடங்கும்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஒதனட்டி செல்லும் சாலையோரத்தில் தனியார் கட்டிடத்தில் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்த பொதுமக்கள் மதுக்கடை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை அந்த மதுக்கடையை திறக்க ஊழியர்கள் அங்கு வந்தனர். இதை அறிந்த பொதுமக்கள் மதுக்கடை முன்பு திரண்டு ஊழியர்களை முற்றுகையிட்டனர். பின்னர் மதுக்கடையை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தாசில்தார்(சிறப்பு) இந்திரா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜெகதளாவில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. அதன்பின்னர் தாசில்தாரின் அறிவுரையின்பேரில் மதுக்கடையை திறக்காமல் ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து பொதுமக்களும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story