‘பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அனைத்து துறைகளிலும் சாதிப்பார்கள்’ - ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேச்சு


‘பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அனைத்து துறைகளிலும் சாதிப்பார்கள்’ - ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேச்சு
x
தினத்தந்தி 24 Aug 2019 4:30 AM IST (Updated: 24 Aug 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அனைத்து துறைகளிலும் சாதிப்பார்கள் என்று ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜோதிமணி கூறினார்.

ஈரோடு,

ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி அறக்கட்டளை மற்றும் வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழா ஆண்டினையொட்டி 5 நாட்கள் விழா நடந்து வருகிறது. கடந்த 21-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விழாவை தொடங்கி வைத்தார். 3-வது நாளான நேற்று நடமாடும் அறிவியல் அருங்காட்சியகம் திறப்பு விழா மற்றும் சான்றோர்களை கவுரவிக்கும் விழா நடந்தது.

வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஈ.கே.லிங்கமூர்த்தி, எஸ்.சி.சுப்ரமணியம், கே.கே.சின்னசாமி, கே.எம்.அவினாசியப்பன், டாக்டர் வி.பி.ரவீந்திரன், என்.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி கலந்து கொண்டு நடமாடும் அறிவியல் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு கிடைக்கும் கல்வி என்பது ஒரு குடும்பத்துக்கே வழங்கப்படும் கல்வியாகும். பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தால் அவர்கள் அனைத்து துறையிலும் சாதிப்பார்கள். நமது நாட்டில் 1972-ம் ஆண்டு கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக இருந்தது. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது அது 54.16 சதவீதமாக உயர்ந்தது. 30 ஆண்டுகளில் 30 சதவீதம் கல்விகற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகும்.

மாணவிகள் அதிகம் இருப்பதால் சில விஷயங்களை கூறுகிறேன். மாணவிகள் நன்றாக படியுங்கள். எப்போதும் உங்கள் தாய்-தந்தையரை மறக்காதீர்கள். தாயில் கெட்ட தாய் என்று எவரும் கிடையாது. தந்தை உங்களுக்கு உலகத்தை காட்டியவர். ஆசிரியர்களை எப்போதும் மறக்காதீர்கள். அடுத்து நாடு. நாம் பிறந்த இந்த இந்திய திருநாடு. நாம் வெளிநாட்டுக்கு சென்றால் நம்மை நீங்கள் காந்தியின் நாட்டில் இருந்து வருகிறீர்களா? என்றுதான் கேட்பார்கள். அப்படி சிறப்பு பெற்ற நமது நாட்டை உயிராக போற்றுங்கள்.

இன்றைய உலகின் பெரிய சவாலாக இருப்பது உலக வெப்பமயமாதல். ஏற்கனவே நமது உலகம் 40 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பாக இருக்கிறது. உலக வெப்பமயமாதல் அதிகரித்தால் இன்னும் 25 சதவீதம் அளவுக்கு நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே உலக வெப்பமயமாதலை தடுக்க மாணவிகள் உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜோதிமணி கூறினார்.

முன்னதாக வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் சி.ஜெயக்குமார் வரவேற்றார். வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் என்.மரகதம் நன்றி கூறினார்.

மாலையில் ஆனந்தமாய் வாழ்வோம் என்ற தலைப்பில் சுகி.சிவம் சொற்பொழிவு நடந்தது. வேளாளர் பள்ளிக்கூட மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கல்விச்சான்றோர்களை கவுரவித்தல், சுயவேலைவாய்ப்பு தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா, முன்னாள் மாணவியர் பொன்விழா மலர் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டு காந்தீயம் என்ற தலைப்பில் பேசுகிறார்.

Next Story