தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி தொழிற்பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தயார் மத்திய மந்திரி தகவல்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிற்பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் எல்.மண்டாவியா தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிற்பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் எல்.மண்டாவியா தெரிவித்தார்.
திறப்பு விழா
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கப்பல் வரும் நுழைவு வாயில் ரூ.13 கோடியே 11 லட்சம் செலவில் 230 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இதே போன்று 140 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலை ரூ.76 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. மேலும் துறைமுக ரெயில் பரிமாற்ற முனையத்தில் இருந்து முயல் தீவுக்கு ரூ.58 கோடியே 30 லட்சம் செலவில் ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 1-வது நிலக்கரி தளம் ரூ.50 கோடியே 12 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
திரேஸ்புரம் முத்தரையர் நகரில் மீன் ஏலக்கூடம் மற்றும் மீன்வலை பின்னும் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றின் திறப்பு விழாவும், புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வையாபுரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மத்திய கப்பல், ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி (தனி பொறுப்பு) மன்சுக் எல்.மண்டாவியா கலந்து கொண்டு முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
ஆய்வு
தொடர்ந்து அவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இழுவைப்படகில் சென்று துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக போக்குவரத்து மேலாளர் பிரபாகர், தலைமை கண்காணிப்பு அதிகாரி சுரேஷ்பாபு, தலைமை பொறியாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மத்திய மந்திரி மன்சுக் எல்.மண்டாவியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தொழிற்பூங்கா
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. கொழும்பு துறைமுகத்தில் 25 லட்சம் கன்டெய்னர் பரிமாற்றம் நடக்கிறது. இந்த கன்டெய்னர்களை தூத்துக்குடிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி பெரிய கப்பல்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்குள் வருவதற்காக துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி, நுழைவுவாயில் விரிவாக்கம் செய்யும் பணி உள்பட சுமார் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிவடையும்.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு சொந்தமாக உள்ள 702 ஏக்கர் நிலத்தில் ஏற்றுமதி-இறக்குமதி சார்ந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு ஆலைகளை அமைத்தால் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். தேசிய அளவில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 200 பணிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 123 பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story