கடலூர் முதுநகரில் குடும்பத்துடன், தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
கடலூர் முதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் முதுநகர்,
தொழிற்சங்கத்தின் 20 அம்ச கோரிக்கை மீதான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், பல ஆண்டுகளாக வழங்கப்படாத பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளர் ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர் சுகநேசனை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.
தொழிற்சங்க துணைத் தலைவர் கணேஷ்பாண்டியை பணியிட மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் ஆணையரால் போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் முதுநகர் சிப்காட்டில் உள்ள தொழிலாளர்கள் கடந்த 2 வாரங்களாக பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று தங்களது குடும்பத்துடன் கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால்வளவன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில இளைஞர் அணி செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொறுப்பாளர் சேகர் கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் ரிச்சர்ட் தேவநாதன் மற்றும் கடலூர் சிப்காட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story