தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: நெல்லையில் போலீசார் விடிய, விடிய சோதனை


தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: நெல்லையில் போலீசார் விடிய, விடிய சோதனை
x
தினத்தந்தி 24 Aug 2019 3:45 AM IST (Updated: 24 Aug 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நெல்லையில் போலீசார் நேற்று இரவு விடிய, விடிய சோதனை நடத்தினர்.

நெல்லை, 

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நெல்லையில் போலீசார் நேற்று இரவு விடிய, விடிய சோதனை நடத்தினர்.

தீவிரவாதிகள் ஊடுருவல்

இலங்கை, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகரில் போலீசார் நேற்று விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர்.

மேலும் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். நெல்லை மாநகருக்குள் நுழையும் தாழையூத்து, பழையபேட்டை, டக்கரம்மாள்புரம் மற்றும் கே.டி.சி. நகர் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

நெல்லையப்பர் கோவில், வண்ணார்பேட்டை பாலம், சந்திப்பு ரெயில் நிலையம், புதிய பஸ் நிலைய பகுதியில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணிக்கு நிறுத்தப்பட்டனர். ரெயில்வே தண்டவாளத்தையொட்டி ரெயில்வே போலீசாருடன் உள்ளூர் போலீசாரும் சேர்ந்து ரோந்து சென்று மர்ம பொருட்கள் ஏதும் கிடக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

ரெயில் நிலையம்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். தீவிர சோதனைக்கு பிறகே பயணிகளை ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதித்தனர். நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் கிரண், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர் ஜூடித் ஆகியோர் தலைமையில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்றது. மோப்ப நாய் ‘நான்சி’ வரவழைக்கப்பட்டு பயணிகளின் உடைமைகளில் வெடிமருந்து பொருட்கள் ஏதும் உள்ளதா? என்றும் சோதனை நடத்தப்பட்டது.

இதுதவிர நெல்லை மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொழிலக பாதுகாப்பு படையினருடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.

200 பேர் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் கூறுகையில், “மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உத்தரவுப்படி உளவுத்துறை எச்சரிக்கையையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள். வாகன எண்களை பதிவு செய்து, அந்த வாகனங்கள் புறப்பட்ட இடம், செல்லும் இடம் விவரங்களையும் குறித்துக்கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தங்கி இருப்போரின் முகவரிகளை சிறப்பு போலீஸ் படையினர் சரிபார்த்தனர். இரவு சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றியும், விதிமுறைகளை மீறியும் செயல்பட்ட வாகன ஓட்டிகள் 200 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் போலீசார் பட்டியலில் உள்ள நபர்கள் நடமாட்டம் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்றார்.

Next Story