லட்சத்தீவு சிறையில் இருந்து குமரி மீனவர்கள் 7 பேர் விடுதலை


லட்சத்தீவு சிறையில் இருந்து குமரி மீனவர்கள் 7 பேர் விடுதலை
x
தினத்தந்தி 24 Aug 2019 4:30 AM IST (Updated: 24 Aug 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

லட்சத்தீவு சிறையில் இருந்த குமரி மீனவர்கள் 7 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

கருங்கல், 

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த வில்லியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடந்த மே மாதம் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

இந்தநிலையில் லட்சத்தீவு கடல் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி மீன்பிடித்ததாக அந்த படகில் பயணம் செய்த தூத்தூரை சேர்ந்த வில்லியம், நேசையன், நடுத்துறையை சேர்ந்த கிளிட்டஸ், டெரில், அம்மாண்டிவிளை வினு, கல்பாடி சக்திவேல், மிடாலம் ஜோ ரஞ்சித் மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் அப்துல் முத்தாலிப் ஆகிய 8 மீனவர்களை கடலோர காவல் படையினர் சிறைபிடித்தனர். பின்னர் அனைவரையும் கைது செய்து லட்சத்தீவில் உள்ள சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே சிறையில் தவிக்கும் மீனவர்களை மீட்க எச்.வசந்தகுமார் எம்.பி. நடவடிக்கை மேற்கொண்டார். இந்தநிலையில் லட்சத்தீவில் உள்ள நீதிமன்றம் மீனவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

இந்த மீனவர்கள் கப்பல் மூலமாக இன்று (சனிக்கிழமை) கேரள மாநிலம் கொச்சினை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அவர்கள் சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு திரும்புவார்கள். சிறையில் தவித்த குமரி மீனவர்கள் 7 பேர் சொந்த ஊர் திரும்பும் செய்தியை கேட்ட அவர்களுடைய குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையே எச்.வசந்தகுமார் எம்.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் முயற்சியால் லட்சத்தீவு சிறையில் இருந்து தற்போது 8 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் விடுதலைக்கு முயற்சி எடுத்த எச்.வசந்தகுமார் எம்.பி.க்கு மீனவர் சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story