விடுமுறை தினத்தில் நிகழ்ந்த சோகம்: மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் சாவு, மற்றொரு மாணவன் மீட்பு


விடுமுறை தினத்தில் நிகழ்ந்த சோகம்: மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் சாவு, மற்றொரு மாணவன் மீட்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 5:00 AM IST (Updated: 24 Aug 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மற்றொரு மாணவன் மீட்கப்பட்டான்.

மதுரை,

மதுரை கோ.புதூர் காந்திபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி. பாண்டிகோவிலில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் பாலபிரபாகரன் (வயது 12). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பாலபிரபாகரன் மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு சென்றான். அவனுடன் அதே வகுப்பில் படிக்கும் உதயகுமார் என்ற சிறுவனும், நீச்சல் குளத்துக்கு சென்றிருந்தான். அவர்களுடன் வேறு சில சிறுவர்களும் குளித்து கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், பாலபிரபாகரன் மற்றும் உதயகுமார் ஆகியோர் அந்த நீச்சல் குளத்தில் உள்ள ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த ஒப்பந்த ஊழியர்களும் கவனிக்கவில்லை என தெரிகிறது. சிறிது நேரத்தில் அருகில் குளித்து கொண்டிருந்த சக சிறுவர்கள், அவர்களை காணவில்லை என்று கூச்சலிட்டுள்ளனர்.

அதன்பின்னர் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் நீச்சல் குளத்திற்குள் இறங்கி நீரில் மூழ்கிய பாலபிரபாகரன் மற்றும் உதயகுமாரை மயங்கிய நிலையில் மீட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஆட்டோ மூலம் மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலபிரபாகரன் பரிதாபமாக இறந்துபோனான். இதனை தொடர்ந்து பாலபிரபாகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உதயகுமாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story