மணப்பாறையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


மணப்பாறையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Aug 2019 10:45 PM GMT (Updated: 23 Aug 2019 8:15 PM GMT)

மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை, 

மணப்பாறை நகராட்சிப் பகுதியில் உள்ள 27 வார்டுகளிலும் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காவிரி குடிநீரை மட்டுமே மக்கள் நம்பி இருந்த நிலையில், தற்போது அதுவும் கிடைக்காததால் குடிநீரை தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அதை கண்டித்தும், குடிநீர் கேட்டும் நேற்று காலை காலிக்குடங்களுடன் திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்த மக்கள், நகராட்சி அதிகாரிகள் வந்து விளக்கம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

ஆனால் நேற்று அரசு விடுமுறை என்பதால் யாரும் வரவில்லை. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை பற்றி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கான தீர்வு காணப்படும் என்று இன்ஸ்பெக்டர் கூறியதை அடுத்து, சாலை மறியலை கைவிட்டு சாலையோரம் நின்றிருந்த மக்கள் பின்னர் புறப்பட்டு சென்றனர்.

மணப்பாறை நகராட்சிப் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் தற்போது நடைபெற்று வரும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமிலும் அதிக அளவிலான மனுக்கள் குடிநீர் பிரச்சினை குறித்தே வழங்கப் படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story