நெல்லை அருகே அண்ணன்-தம்பியை தாக்கி காரில் கடத்தல்; 2 பேர் கைது
நெல்லை அருகே அண்ணன், தம்பியை தாக்கி காரில் கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை,
நெல்லை அருகே அண்ணன், தம்பியை தாக்கி காரில் கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோப்பு பவுடர் வியாபாரம்
திண்டுக்கல்லை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன்கள் கணேஷ்குமார் (வயது 24), சதீஷ்குமார் (21). இவர்கள் நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து சோப்பு பவுடர் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் ராமையன்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மனைவி மாரிச்செல்வி (23) சம்பளத்திற்கு சோப்பு பவுடரை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாரிச்செல்வி வேலையை விட்டு நின்றுவிட்டார். அவருக்கு சம்பளம் பணம் ரூ.2 ஆயிரத்து 500 பாக்கி இருந்தது. இதற்கிடையே கணேஷ்குமார் நேற்று மாரிச்செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டு, வேலைக்கு வருமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது முத்துக்குமார், கணேஷ்குமாரிடம் எனது மனைவி இனி வேலைக்கு வரமாட்டாள் எனவே அவளுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்குமாறு கூறினார்.
காரில் கடத்தல்
மேலும் முத்துக்குமாரும், அவருடையை நண்பர் சிவந்திப்பட்டியை சேர்ந்த முருகனும் (24) கணேஷ்குமாரின் வீட்டுக்கு சென்று, அவரிடம் சம்பள பணத்தை கேட்டதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், முருகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து கணேஷ்குமாரையும், சதீஷ்குமாரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் 2 பேரையும் அங்கு நின்ற கணேஷ்குமாரின் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி போலீசார் தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்த காரை மறித்து, முத்துக்குமார், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story